http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17794
கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை
எப்படித் தான் தீர்ப்பது?
இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?
இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?
உங்கள் எடுத்துக்காட்டு நல்லாத்தான் இருக்கு. அதற்காகப் பதிமூன்றாயிரம் கோடி உருபா போட்ட பிறகு இன்று வந்து போராடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இந்தப் போராட்டம் ஒன்றும் இன்று தொடங்கியதில்லை. இப்போராட்டத்திற்கு இருபத்தைந்து ஆண்டு வரலாறு இருக்கிறது.
சொல்வதற்கு ஓர் அளவு வேண்டாமா? ஏதோ ஆறு மாதம், ஒரு வருடமாகப் போராடி வருகிறோம் என்றால் சரி! அதற்காக ஒரேயடியாக இருபத்தைந்து ஆண்டுகள் என்றால் யாராவது
நம்புவார்களா?
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருபத்தைந்து ஆண்டு வரலாறு இப்போராட்டத்திற்கு இருக்கிறது.
நீங்கள் சொல்லும் ‘இருபத்தைந்தாண்டு’க்கு ஏதாவது ஒரு சான்றாவது சொல்ல முடியுமா?
ஒன்றென்ன? நூறு சான்றுகள் காட்ட முடியும்.
அ) 1986இல் தினமணி செய்தித்தாளில் அணு உலைகளின் பாதிப்புகள் பற்றி மிக விரிவான கட்டுரை வெளிவந்தது. அப்போதே அணு உலை எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது.
ஆ) அணு உலைக் கழிவுகள் பற்றித் தினமணியில் ஐராவதம் மகாதேவன் கட்டுரை எழுதியதன் அடிப்படையில் அன்றைய முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன் அணுமின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.
ஆ) 1987இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.
இ) 1987 செப்டம்பர் 22ஆம் நாள் இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத்திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது.
ஈ) 1988இல் திருநெல்வேலியில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.
உ) 1988 நவம்பர் 21ஆம் நாள் பாராளுமன்றத்தில் அணு உலையை எதிர்த்து வைகோ உரை நிகழ்த்தினார்.
ஊ)1989இல் நாகர்கோவிலில் ஊர்வலம், 1989 மார்ச்சு இருபதாம் நாள் தூத்துக்குடியில் ஊர்வலம் என
எல்லாவற்றிலும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
எ) தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு, பாலபிராசாபதி அடிகள் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஏ) எழுத்தாளர் நாகார்ச்சுனன் 1989இல் சூனியர் விகடனில் ‘கொல்ல வரும் கூடங்குளம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.
ஐ) அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்த சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிற்கு மும்பையிலும் தில்லியிலும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்யப்பட்டது.
ஒ) 1989 மே முதல் நாள், ‘Save Water Save Life’
என்னும் உறுதிமொழியுடன் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமசு கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பத்தாயிரம் பேருக்கும் அதிகம் பேர் பங்கேற்ற பெரிய பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது; பலர் காயமடைந்தனர்.
ஓ) 1989 சூன் 3 முதல் 13ஆம் நாள் வரை மருத்துவர் குமாரதாசு தலைமையில் திருநெல்வேலியிலும் அதைச் சுற்றி உள்ள சிற்றூர்களிலும் அணு உலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.
ஒள) 1989 சூன் பதின்மூன்றாம் நாள் கூடங்குளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
க) கூடங்குளம் அணு உலைக்குப் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 101 தொடர் பொதுக்கூட்டங்கள் நாகர்கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடத்தப்பட்டன.
உ) 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கையைக் கொண்டிருந்தன.
ங) பேச்சிப்பாறை அணியில் இருந்து தண்ணீர்க்குழாய் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடத்தப்பட்டது.
ச) முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடக்கவிருந்த மூன்று வெவ்வேறு அடிக்கல் நாட்டு விழாக்கள் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டன.
* தமிழக ஆளுநர் முன்னிலையில் மதுரையில் நடந்த மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராசா வெளிப்படையாக அணு உலையை எதிர்த்துப் பேசினார்.
* இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் நாசர் போன்ற திரைக்கலைஞர்கள் பலர் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டுள்ளனர்.
·
தமிழில் கூடங்குளத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
·
மருத்துவர் இரமேசு, பிரேமா நந்தகுமார், ஞாநி, ஊடகவியலாளர் A.S.பன்னீர்செல்வன், நீலகண்டன், குமாரசாமி, மருத்துவர் தெய்வநாயகம், எழுத்தாளர் செ.திவான், சுப.உதயகுமார் எனப் பலர் கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
·
‘பிராண்ட்லைன்’ இதழில் மார்க்சிய சூழலியலாளர் பிரபுல் பித்வாய் இருபத்தைந்து ஆண்டுகளாகக் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்தும் அணு உலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு போதுமா? இன்னும் எதிர்பார்க்கிறீர்களா?
உங்களுக்கு என்ன சிக்கல்? கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது என்கிறீர்கள் அவ்வளவு தானே!
ஆமாம்! உறுதியாக அதைத்தான் சொல்கிறோம்.
ஏன் அவ்வளவு உறுதியாக வேண்டாம் என்கிறீர்கள்?
கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் எரிமலைக் குழம்புகளால் ஆனது. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி, சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த இராம் சருமா ஆகியோர் இந்த எரிமலைக் குழம்புகள் பற்றித் தங்கள் ஆய்வுகளில் கூறியிருக்கிறார்கள். 2004 நவம்பர் மாதம் வந்த ‘கரண்டு சைன்சு’ இதழில் இவ்வாய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கூடங்குளத்தில் இருக்கும் ‘உருகிய பாறைப் பிதுங்கல்கள்’ நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து விடும் வாய்ப்பு மிக அதிகம்.
சரி! அப்படியானால் வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைப்பதில் உங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை அப்படித்தானே?
இல்லை. அணுமின் நிலையங்களை எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறோம்.
எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறீர்களா? அணுமின் திட்டம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதை எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத்
தள்ளிவிடாதா?
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! ஒரு தொழில்நுட்பத்தையே எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடும் தான்! அதே வேளை அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மனித குலத்தையே அழித்து விடும் என்றால் அப்படி ஒரு தொழில்நுட்பம் நமக்குத் தேவையா எனச் சிந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, அத்தொ
(Message over 64k, truncated.)